பெங்களூருவில் ஐ.டி. துறையில் பணிபுரியும் இளைஞர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், தனது அம்மா, சகோதரி ஆகியோரின் படம் ஆபாசமாக இன்டர்நெட்டில் வெளியாகியிருக்கிறது. அதை போஸ்ட் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இருந்தார். போலீஸ் விசாரணையில் இறங்கியது. அந்தப் படத்தை போஸ்ட் செய்தது யார் தெரியுமா... புகார் கொடுத்தவரின் மனைவி. குடும்பச் சண்டையில் விவாகரத்து வாங்கிய அந்தப் பெண், பழைய பகையை இப்படித் தீர்த்துக்கொண்டுள்ளார். அந்தப் பெண்ணும் இப் போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுபோல, ஒரே வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் ஈகோ மோதல் வரும்போது, இன்டர்நெட்டில் அவதூறுச் செய்திகளை போஸ்ட் செய்வது, மார்ஃபிங் செய்து அசிங்கமாகப் படத்தை போஸ்ட் செய்வது என்று சிலர் ஈடுபடுகிறார்கள். நேரடியாக எதிர்கொள்ளத் துணிவில்லாமல் மறைமுகமாக இதுபோல மனரீதியான டார்ச்சர் கொடுக்க நினைத்து போலீஸாரிடம் சிக்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகின்றன.
சாக்லெட் மாமாவும் ரகசிய கேமராவும்!
சென்னை, சூளைமேட்டில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வில் ஹும்ஸ் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளிடம் அன் பாகப் பேசுவார். சாக்லெட் கொடுப்பார். அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விளையாடி இருக்கிறார். பிறகு அந்தக் குழந்தைகளை தகாத உறவுக்கு பயன்படுத்தி இருக்கிறார். அதைத் கேம ராவிலும் வீடியோ எடுத்து நெட்டில் உலவ விட்டிருக்கிறார். இன்டர்போல் போலீஸ் இதைக் கண்டுபிடித்து, சென்னை போலீஸுக்குச் சொல்லியது. வில் ஹும்ஸ் கைது செய்யப்பட்டார். அதன்பிறகுதான் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு விஷயமே தெரிந்தது. இந்தச் சாக்லெட் மாமாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.
ஆயிரத்துக்கு பத்து!
சோழிங்கநல்லூரில் இருக்கும் இன்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் செய்த தகிடுதத்தம் வித்தியாசமானது. நம்பர் விளையாட்டு என்ற டெக்னாலஜியைத் தெரிந்துகொண்டு, அதைப் பயன்படுத்தி ஆன் லைனில் மோசடி செய்திருக்கிறார். டி.வி, ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்களை ஆன்லைனில் பர்ச்சேஸ் செய்வார். உதாரணத்துக்கு, ஆயிரம் ரூபாய்க்கு இவர் ஒரு பொருளை பர்ச்சேஸ் செய்கிறார் என்றால், இவரது அக்கவுன்ட் உள்ள வங்கிக்குப் போகும்போது நம்பர் விளையாட்டை செயல்படுத்துவார். ஆயிரம் ரூபாய் என்பதற்கு பதில் வெறும் பத்து ரூபாய்தான் டெபிட் ஆகும். ஆனால், வங்கிக் கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் பொருளை விற்கும் கம்பெனிக்குப் போகும். அதைப் பெற்றுக்கொண்ட கம்பெனி இந்த மாணவர் கேட்ட பொருளை சப்ளை செய்துவிடும். ஆக, அந்த மாணவருக்கோ, கம்பெனிக்கோ நஷ்டமில்லை. ஆனால், வங்கிக்குத்தான் நஷ்டம். ஒருகட்டத்தில், வங்கி அதிகாரிகள் உஷாராகி போலீஸுக்கு சொல்ல... அந்த மாணவர் பிடிபட்டார்.
ரகசிய சினேகிதன்!
பிரபல வங்கியின் பின்னணியில் செயல்படும் ஐ.டி. நிறுவனம் அது! அங்கு உயர் பதவியில் இருந்த ஒரு இளம்பெண், தனது காதலனுக்காக கம்பெனியில் திருட்டுத்தனத்தைச் செய் திருக்கிறார். நீண்டகாலமாகப் பயன்படுத்தாத வங்கிக் கணக்குகள் எவை என்று கணக்கெடுத்திருக்கிறார். அந்தப் பணத்தை ரகசியமாக வேறு கணக்குக்கு மாற்றியிருக்கிறார். கணக்கில் பணம் குறைவதை எதேச்சையாகப் பார்த்த கஸ்டமர் வங்கியில் விசாரிக்க... அந்தப் பெண் மாட்டிக்கொண்டார். அதற்குள், ஒரு கோடி ரூபாயைச் சுருட்டிவிட்டார். காதலன் பணத்தை எடுப்பதற்குள் போலீஸ் மடக்கிவிட்டது. அவர் ஏற்கெனவே திருமணமானவர் என்பது கூடுதல் தகவல்.
- இப்படியாக தினமும் ஒரு சைபர் க்ரைம் சம்பவங்கள் நடக்கின்றன. வெளிநாடுகளில் ஒரு டாலருக்கு ஒரு வைரஸ் என்றெல்லாம் கிடைக்கிறதாம். இதை ஆன்லைனில் விலைக்கு வாங்கி தனக்கு வேண்டாதவர்களின் மெயில், செல் போன்களில் பரவவிடுகிறார்கள் சைக்கோ குணம் கொண்ட சிலர். அவ்வளவுதான்..! எதிர்தரப்பினரின் கம்ப்யூட்டர், செல்போன்களில் உள்ள அத்தனை தகவல்களும் காணாமல் போய்விடும். அவர் படும் அவஸ்தையைப் பார்த்து ரசிக்கும் குரூர குணம் உள்ளவர்களை என்ன செய்வது?
தலைவனை நெருங்காத போலீஸ்!
மதுரையில் ஒருமாதத்துக்கு முன், போலி கிரெடிட் கார்டு கும்பலைப் பிடித்தார் அப்போதைய போலீஸ் டெபுடி கமிஷனர் ஃபெரோஸ்கான் அப்துல்லா. பிடிபட்டவர்கள் சொன்னதில் இருந்து உலக அளவில் அதிக பண பரிவர்த்தனை செய்யும் பணக்காரர்கள் பற்றிய விவரங்களை வெளிப்படையாக விற்கும் வெப்சைட்டுகள் இருப்பதை அறிந்து அதிர்ந்தாராம். அங்கே பணத்தை ஆன்லைனில் செலுத்தி விவரங்களை மதுரைக் கும்பல் வாங்கி மோசடி செய்திருக்கிறது. மதுரை, திண்டுக்கல், நெல்லை என முக்கிய ஊர்களில் உள்ள பிரபல ஜுவல்லரி, துணிக்கடை போன்ற 17 நிறுவனங்களில் 80 லட்ச ரூபாய் வரை போலி கிரெடிட் கார்டில் சுருட்டியிருக்கிறார்கள். இதற்கு மதுரையில் உள்ள வங்கி ஒன்றின் அதிகாரியும் உடந்தையாம். இந்தக் கும்பலின் நெட்-வொர்க் வெளிநாடுகளுக்கும் நீண்டிருக்கிறது. திருச்சி ரவி என்பவன்தான் தமிழகத்தில் உள்ள போலி கிரெடிட் கார்டு மோசடிக் கும்பல்களுக்குத் தலைவனாம். அவனை இன்னும் போலீஸ் நெருங்கவில்லை. தமிழகத்தில் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடிப் பேர்வழிகள் ஆன்லைனில் ஏமாற்றியிருக்கிறார்கள்.
தலை... உடல்... ஆபாச எஸ்.எம்.எஸ்.!
சென்னை சைபர் க்ரைம் போலீஸ் என்ன சொல்கிறது? ''60 சதவிகிதம் பேர் செல்போன் வழியாக இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள். இதில் குடும்ப வன்முறைகள்கூட தொடர்புப் படுத்தப்படுகிறது. பழிவாங்கும் விதமாக, இன்டர்நெட்டில் உள்ள ஆபாசப் படங்களை எடுத்து தங்கள் குடும்பத்து நபர்களின் தலைப் பகுதியை மட்டும் அந்த உடலோடு இணைத்து போஸ்ட் செய்கிறார்கள். மனைவியின் டார்ச்சர் சகிக்க முடியாத கணவன் ஒரே வீட்டில் இருந்து கொண்டு மனைவிக்கே ஆபாச
எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார். அப்படியாவது, அவள் கவனம் வேறுபக்கம் திரும்பும் என்று தப்புக் கணக்குப் போட்டு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். இதேபோல, கணவரின் டார்ச்சர் தாங்கமுடியாத மனைவிகள் வேறு விதத்தில் கணவர் மீது அவதூறுகளைப் பரப்புகிறார்கள். இவர்கள் எங்களிடம் புகார் செய்வார்கள். யார் இதைச் செய்தது என்பதை தெரிந்துகொள்வதற்காகத்தான் எங்களிடம் வருகிறார்கள். எங்கள் விசாரணையில் இன்னார் என்று தெரிந்ததும், புகாரை வாபஸ் பெற்றுச் செல்கிறார்கள். நாங்களும் மனிதாபிமான முறையில் அதைக் கண்டுகொள்ளாமல்விட வேண்டியிருக்கிறது'' என்கிறார்கள்.
திருடப்படும் ரகசியங்கள்!
சென்னையில் உள்ள நாஸ்காம் (தகவல் தொடர்பு மற்றும் சாஃப்ட்வேர் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு) மண்டல இயக்குனர் புருஷோத்தமனிடம் இதுபற்றி கேட்டோம். ''இந்தியாவில் சுமார் 30 லட்சம் பேர் ஐ.டி. மற்றும் பி.பி.ஒ. துறைகளில் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்கள். 1.2 கோடி பேர் இந்தத் துறைகளில் மறைமுக வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். 100 பில்லியன் டாலர் புழங்கும் துறைகள் இவை. தமிழ்நாட்டில் மட்டும் மூன்றரை லட்சம் பேர் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி தரும் துறைகள் இவை. இப்போது, டேட்டா திருட்டுதான் பெரிய பிரச்னை. வெளிநாட்டு கம்பெனிகள் நம்ம ஊர் சாஃப்ட்வேர் நிறுவனங்களை நம்பித்தான் தங்களின் ரகசியங்களைத் தருகின்றன. இங்குள்ள சிலர் பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த ரகசியங்களைத் திருடுகின்றனர். இது தெரிந்தால், இந்திய சாஃப்ட் வேர் நிறுவனங்களின் நம்பகத்தன்மை பற்றி வெளிநாட்டினர் என்ன நினைப்பார்கள்? சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் எங்களிடம் வந்தார். வேலையை விட விரும்புவதாகவும் ஆனால், அவரை அந்த நிறுவனம் விடுவிக்க மறுப்பதாகவும் புகார் சொன்னார். விசாரித்தால், அவர் என்னென்ன ரகசியங்களை திருடியிருக்கிறார் என்று அந்த நிறுவனம் பெரிய பட்டியலே தருகிறது. இப்படிப்பட்டவரை என்ன செய்வது? இதேபோல், இன்னொரு நிறுவனத்தில் டேட்டா திருடிய நபரை பிடித்து ஜெயிலுக்கு அனுப்பினோம். பொதுவாகவே, ஐ.டி. துறையினரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும்தான் இந்தத் துறையில் ஈர்க்கப்படுகிறார்கள். அதேபோல், பாதிப்புகளும் இவர்களிடம்தான் அதிகம். அறிவு சார்ந்த தொழில்நுட்பத்தின் நல்லது கெட்டது குறித்து பள்ளியில் இருந்தே படிப்படியாக போதிக்க வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் கெட்டது நடக்காது'' என்றார்.
சைபர் வார்!
இந்தியாவில் உள்ள மத்திய மற்றும் பெரு நிறுவனங்களின் தகவல் பாதுகாப்புக்கான விசேஷ
சாஃப்ட்வேர்களை தயார் செய்கிறது ஃபிக்ஸ்-நிக்ஸ் என்ற தனியார் நிறுவனம். சென்னையில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சண்முகவேல் சங்கரன் நம்மிடம் பேசினார். ''உலகின் பெரிய நாடுகளுக்கு இடையே இந்த நிமிஷம்கூட சைபர் வார் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மூன்றாவது உலகப்போர் ஏற்பட்டால், நிச்சயமாக அது சைபர் போராகத்தான் இருக்கும். தரைப் படை, விமானப் படை, கப்பல் படை எதுவுமே இல்லாமல் ஏ.சி. அறைக்குள் இருந்து கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்திப் பேரழிவை உண்டாக்க
தயாராகி வருகிறார்கள். உதாரணத்துக்கு, 2010-ம் ஆண்டு 'ஸ்டக்ஸ்நெட்' என்ற வைரஸை அமெரிக்கா ஏவியது. அது, ஈரான் நாட்டு அணுமின் உலை ஒன்றை நோக்கிப் போனது. அங்குள்ள முக்கிய சிஸ்டத்தை தாக்கியது. இதனால், அது செயல் இழந்தது. அந்த அட்டாக் ரிவர்ஸ் ஆகி, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முக்கிய கம்ப்யூட்டர் மையங்களையும் தாக்கி சேதப்படுத்தியது. ஈரான் விடுமா? பதிலுக்கு, அமெரிக்க வங்கிகள் மீது சைபர் போர் நடத்தியது. இப்படி மாறி மாறி போர் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் முக்கிய வெப்சைட்களில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4,191 சைபர் அட்டாக் நடந்திருக்கிறது (முழு விவரங்களுக்கு... பார்க்க வரைபடம்). எந்த ஒரு அவசர சூழ்நிலையையும் எதிர்கொள்ள எல்லா வகையிலும் இந்தியாவும் தயாராகத்தான் இருக்கிறது. ப்ரிசம், எட்வர்ட் ஸ்நவ்டன் லீக்குக்கு பிறகு, இந்தியர்களால் தயாரிக் கப்பட்ட மென்பொருட்களை மட்டுமே மத்திய அரசு உபயோகப்படுத்த விரும்புகிறது. இந்தவகையில், சுமார் 20 இந்திய தகவல் பாதுகாப்பு(information security) சாஃப்ட்வேர் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட மத்திய அரசின் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள்'' என்றார்.
மெயிலைத் திறந்தால் வைரஸ் வரும்!
புதுடெல்லியில் உள்ள மைக்ரோ சாஃப்ட் இந்திய தலைமை கணினி பாதுகாப்பு அதிகாரி பா.கணபதி சுப்ரமணியத்திடம் பேசினோம். ''லாட்டரியில் நீங்கள் பரிசு வென்று இருக்கிறீர்கள் என்றோ, விலை உயர்ந்த கார் உங்களுக்கு காத்திருக்கிறது என்றோ வரும் மின்னஞ்சல்கள் உங்களுக்கு பரிச்சயமாக இருக்கக் கூடும். 'என் ராஜ் ஜியத்தில் பாதி தருகிறேன்’ என்றுகூட உங்களை வசியப்படுத்தலாம். ஆனால், அத்தனையும் டுபாக்கூர். உங்களை ஏமாளியாக்க செய்யப்படும் முயற்சிகள். தொடர்பே இல்லாத, முகமறியாத நபர் எதற்காக இப்படித் தர முன்வருகிறார் என நாம் யோசிப்பதில்லை. அந்த அஞ்சலுடன் இணைக்கப்பட்டிருக்கும் டாக்குமென்ட்களை நாம் தயக்கமின்றி திறந்து பார்த்தவுடன், ‘malware’ என்று அழைக்கப்படும் தீங்கிழைக்கும் வைரஸ்கள் யாருடைய அனுமதியுமின்றி நம் கணினியில் வந்து அமரக்கூடும். நம் கணினியில் நாம் வைத்துள்ள மற்ற டாக்குமென்ட்கள் மற்றும் சாஃப்ட்வேர்களை அழிக்கக் கூடும். வங்கித் தளங்களில் நாம் பயன் படுத்தும் பாஸ்வேர்டை நமக்குத் தெரியாமல் பதிவுசெய்து, இந்த வைரஸை பரப்பியவருக்கு பரிமாற்றம் செய்யும். தவிர, அந்த வைரஸ் வெகுவேகமாக நம் கணினியையும் அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் மற்ற கணினிகளுக்கும் வேகமாகப் பரவக்கூடும். Phishing என்று அழைக்கப்படும் தூண்டில் இன்னொரு வகை அட்டாக். நிஜமான இணையதளம் போன்றதொரு தோற்றத்தில் தயாரிக்கப்படும் போலி தளங்கள் Phishing site என அழைக்கப்படுகின்றன.
உதாரணத்துக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இணையத்தளம் போன்றதொரு போலியான தளத்தின் முகவரியுடன் உங்களுக்கு ஒரு மெயில் வரலாம். அத்தகைய இணைய தளங்களுக்குச் சென்று நாம் நம்முடைய பாஸ்வேர்டு கொடுத்து ஓப்பன் செய்யும்போது, நம் விவரங்கள் அந்தப் போலி தளத்தை இயக்கும் நபருக்குப் போய் சேருகிறது. பிறகென்ன? அந்த வசூல் ராஜாக்கள் நம்முடைய வங்கிக் கணக்குகளில் இருந்து சுல பமாகப் பணத்தைத் திருடுகின்றனர்'' என்றவரிடம், ''இதுபோன்ற சைபர் தாக்குதல்களில் இருந்து நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?'' என்று கேட்டோம்.
''போலி சாஃப்ட்வேர்களை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள். தீங்குகள் தரக்கூடிய பல வைரஸ் மற்றும் நாசம் விளைவிக்கக் கூடிய சாஃப்ட்வேர்கள் அத்தகைய போலிகளுடன் மறைந்து வரலாம். ஆண்டாண்டு காலமாக நாம் சேர்த்து வைத்திருக்கும் தகவல்கள் ஒரு நொடியில் காணாமல் போய்விடும். எந்த பிரபல நிறுவனத்தின் சாஃப்ட்வேர்களை பயன்படுத்தினாலும் அவற்றின் லேட்டஸ்ட் வெர்சன்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
மெமரி கார்டு, பென்டிரைவ் ஆகியவை மூலமும் வைரஸ் பரவும் ஆபத்து உண்டு. உங்கள் கணினியில் வேறு நபர்களின் மெமரி கார்டு, பென்டிரைவ் ஆகியவற்றைப் பயன்படுத்தாதீர்கள். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிஃபென்டர் என்ற மென்பொருளை இலவசமாகத் தருகிறது. www.microsoft.com என்ற முகவரியில் இருந்து நீங்கள் அதை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வைரஸ் தடுப்பு சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்துவது சரியல்ல. அத்தகைய சாஃப்ட்வேர்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு, அதனால் சில சமயங்களில் பிரச்னைகள் ஏற்படும்'' என்று எச்சரிக்கை செய்தார். கண்ணுக்குத் தெரிந்த எதிரியாக இருந்தால் சமாளிக்கலாம். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை என்ன செய்வது? உஷாராக இருக்க வேண்டிய தருணம் இது.
- பாலகிஷன்