கட்டழகுடன் ஆரோக்கியமாகத் திகழ ஆண்கள் அனைவரும் விரும்புவார்கள்தானே?
அதற்காக உடற்பயிற்சிக்கூடம் சென்று உடற்பயிற்சி செய்வார்கள், அத்துடன் உடலுக்கு தேவையான கலோரிகள், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், நல்ல கொழுப்புக்கள் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளையும் சாப்பிட விரும்புவார்கள். ஆனால் பலருக்கும், அனைத்துச் சத்துகளையும் பெற என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று தெரிவதில்லை.
அவர்களுக்கு உதவும் விதமாக அந்த உணவுகளின் விவரம் இதோ...
பால், முட்டை: பாலில் புரதம், கால்சியம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. எனவே தினமும் பாலை அருந்தினால் தசைகளின் வளர்ச்சி, எலும்புகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். முட்டையிலும் புரதம் நிறைந்துள்ளதால், தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இறைச்சி: இறைச்சியில் இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் கிரியாட்டின் போன்றவை நிறைந்துள்ளன. இரும்புச்சத்து வலிமையை அதிகரிக்கவும், கிரியாட்டின் ஆற்றலை உற்பத்தி செய்யவும் உதவுகிறது. எனவே உடற்பயிற்சிக் கூடம் செல்லும் நபர்களுக்கு இறைச்சி சிறந்த உணவாக இருக்கும்.
மீன்: மீனில் புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இதை வாரத்துக்கு இருமுறையாவது சாப்பிடுவது நல்லது. முக்கியமாக, மீனில் கொழுப்புகள் குறைவாக இருக்கின்றன.
வேர்க்கடலை வெண்ணெய்: இதில் புரதங்கள், கலோரிகள் மற்றும் நல்ல கொழுப்புகள் அடங்கியுள்ளன. இது உடல் கட்டமைப்பில் பெரிதும் உதவியாக இருப்பதுடன், உடலின் வலிமையை அதிகரிக்கவும் செய்கிறது.
ஓட்ஸ்: உடற்பயிற்சிக்கூடம் சென்று வந்தவுடன், பால் சேர்ந்த ஓட்ஸ் சாப்பிடுவது இழந்த ஆற்றலை மீண்டும் பெற உதவியாக இருக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
வாழைப்பழம்: வாழைப்பழத்தில் நிறைந்துள்ள பிரக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ் சர்க்கரைகள், உடல் வலிமைக்கு உதவியாக இருக்கும். மேலும் வாழைப்பழத்தில் கொழுப்புகள் ஏதும் இல்லாததால், இதை உட்கொள்வது நல்லது.
பாதாம்: பாதாமில் உள்ள புரதங்களும், நார்ச்சத்துகளும் தசைகளின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளன. மேலும் செரிமானத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக