கிராமத்தில் தனது வீட்டுத் திண்ணையில் உடல் நலக்குறைவு காரணமாக சற்றுச் சோர்வாக அமர்ந்திருந்தார் அந்தப் பெண்மணி. அப்போது, ஆர்ப்பாட்டத்தோடு வாகனத்தில் வந்து இறங்கினர் சிலர். ‘அபாரமாய் வெளுக்கும் சலவை சோப்பை அஞ்சே ரூபாய்க்குத் தருகிறோம். வாங்கிக்கங்க... வாங்கிக்கங்க...’ என்று கூவினார்கள்.
கூடவே, குஷியூட்டும் ஓர் அறிவிப்பையும் வெளியிட்டார்கள். ‘ஒவ்வொரு சோப்புடனும் ஒரு கூப்பன் தருவோம். அதை சுரண்டிப் பார்த்தால், டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற விலையுயர்ந்த பரிசுகள் கிடைக்கக் கூடும். உங்களுக்கு வேண்டிய பரிசை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம்’ என்று முழங்கினார்கள். திண்ணைப் பெண்மணியிடமும், ‘அஞ்சு ரூபாய்தானேக்கா... வாங்கிக்கங்க. உங்களுக்குப் பரிசும் கிடைக்கலாமே?’ என்று அன்புக் கோரிக்கை விடுத்தார்கள்.
சரி, போனால் போகுது என்று ஐந்து ரூபாய்க்கு ஒரு சோப்பை வாங்கினார் அவர். அவருக்கு கொடுத்த டோக்கனை சுரண்டிப் பார்க்க, அதில் ‘முதல் பரிசு’ என்றிருந்தது. அப்பெண்மணிக்குத் தலைகால் புரியவில்லை. உடல்நலக்குறைவுகூட ஓடி மறைந்துவிட்டது போன்ற உணர்வு. தனக்கு டி.வி. வாங்கிக்கொள்வதா அல்லது பிரிட்ஜ் அல்லது வாஷிங்மெஷினை தேர்வு செய்வதா என்று இனிய குழப்பத்தில் மூழ்கினார் அவர். அதற்குள் விஷயம் கிராமமெங்கும் தீயாய் பரவிவிட்டது. பாய்ந்து வந்து சோப்புகளை அள்ளத் தொடங்கினார்கள். திண்ணை அக்காவுக்கோ தனக்கு எப்போது பரிசு கொடுப்பார்கள் என்ற பதற்றம். சோப்புக்காரர்களிடம் மெதுவாய் அவர் கேள்வியைப் போட, ‘வாங்கக்கா... வீட்டுக்குள்ளே போய் பேசுவோம்’ என்று அழைத்தது அந்த ‘டீம்’. ‘சரி, வீட்டுக்குள் வைத்துத்தான் பரிசைக் கொடுப்பார்கள் போல’ என்று உள்ளே அழைத்துச் சென்றார். வீட்டுக்குள் போனதும், தட்டு, பூரி தேய்க்கும் கட்டை, கரண்டி, லொட்டு லொசுக்கு என்று சில பொருட்களைக் கடைபரப்பினார்கள்.
பார்வையிலேயே அவை படு மலிவானவை என்பது தெரிந்தது. ‘மூவாயிரம் மதிப்புள்ள இந்தப் பொருட்களை ‘கம்பெனி’ உங்களுக்கு வெறும் 1500 ரூபாய்க்குத் தருது... வாங்கிக்கங்க’ என்றார்கள். பெண்மணிக்கு எரிச்சல். ‘அது சரி, நீங்க பரிசா தருவதா சொன்ன பொருள் எங்கே?’ என்றார் அவசரமாய். ‘நீங்க இந்தப் பொருட்களையெல்லாம் வாங்கிக் கொண்டால், நாங்கள் ஊருக்குச் சென்று அனுப்பிவைப்போம்’ என்று காதில் சூட்டுவதற்கு சரம் சரமாய் மாலை தொடுத்தார்கள்.
பெண்மணி கோபமாகிவிட்டார், ‘எனக்கு எந்தப் பொருளும் வேணாம், நீங்க போயிட்டு வாங்க’ என்று ஐந்து ரூபாயோடு போகட்டும் என்று அவர்களை வெளியே துரத்தினார். அவர்களிடம் சோப்பு வாங்கிய மக்கள் கும்பல் தங்களுக்கு எப்போது பரிசு கிடைக்கும் என்று சூழ்ந்து நச்சரிக்க, ‘விரைவில் வெள்ளித் திரையில் காணுங்கள்’ என்று ‘டாட்டா’ காட்டிவிட்டு, ‘சோப்பு’ போடுவதற்கு அடுத்த ஊருக்கு வேனை கிளப்பிவிட்டார்கள். சோப்பு பார்ட்டிகள் உங்கள் ஊருக்கும் வரக்கூடும், ஜாக்கிரதை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக