மேற்கு வங்காளத்தில், கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் கங்கனாப்பூரில் இயேசு சபைக்கு சொந்தமான கான்வெட் பள்ளி ஒன்று உள்ளது. பள்ளிக்குள், முகமூடி அணிந்த 7, 8 பேர் திடீரென புகுந்தனர். முதலில், பள்ளிக்கூட காவலாளியை கட்டிப்போட்ட அவர்கள் பள்ளியின் முதல்வரின் அறையை நோக்கி சென்றனர். அப்போது, அங்கு பள்ளியின் 72 வயது மூத்த கன்னியாஸ்திரி உறங்கிக்கொண்டிருந்தார். பக்கத்து அறைக்கு தூக்கிச்சென்று அவரை அந்த கும்பல் கற்பழித்தது.
பின்னர், பள்ளியின் அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.13 லட்சம், மடிக்கணினி, செல்போன்கள், கேமராக்களை கொள்ளையடித்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கற்பழிப்பால் படுகாயமடைந்த கன்னியாஸ்திரி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை அடுத்து பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உடனடியாக சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சி.ஐ.டி. அதிகாரிகள் பள்ளியில் பொருத்தப்பட்டு இருந்த வீடியோ கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனை கொண்டு இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். குற்றவாளிகள் 4 பேர் அடங்கிய காட்சிகளையும் போலீசார் சி.சி.டி.வி. பதிவில் இருந்து பெற்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் தொடர்பாக சரியான தகவலை தெரிவிப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று போலீஸ் அறிவித்து உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக