கட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும் ?
புதிதாக கட்டப்படும் கட்டிடமாக இருந்தாலும் அல்லது ஏற்கனவே
கட்டப்பட்ட கட்டிடங்களோடு சேர்த்து கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டாலும் அதற்கான திட்ட அனுமதி பெறுவது கட்டாயமானதாகும். இந்த அனுமதியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) அல்லது நகர திட்ட இயக்ககம் (டி.டி.சி.பி) அமைப்புகளில் ஏதாவது ஒன்றிடமிருந்து பெற வேண்டும்.
அனுமதி கொடுக்கும் நடைமுறை
அதாவது லேஅவுட் சி.எம்.டி.ஏ.வால் வரையறுக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இதை அதிகாரிகள் நேரடியாகவே விண்ணப்பித்தவரின் இடத்திற்கு வந்து ஆய்வு செய்வார்கள்.
திட்ட வரைபடமானது விதிமுறைக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே திட்ட அனுமதி வழங்கப்படும். அவ்வாறு இல்லையென்றால் சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அந்த திட்ட வரைபடத்திற்கு அனுமதி அளிக்காது.
எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
சென்னையில் வீடு அல்லது கட்டிடம் கட்டுபவர்கள் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மற்ற நகரங்களில் வசிப்
பவர்கள் டி.டி.சி.பி.யின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்.
நில உரிமையாளர் அல்லது குத்தகைதாரர் கட்டிடம் கட்டுவதற்கான
அனுமதியைக் கேட்டு விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த விண்ணப்பமானது வரையறுக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.
மூன்று படிவங்கள்
சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அமைப்பு களிடம் அனுமதி கோரும் விண்ணப்ப படிவங்கள் ஏ, பி, சி என்று மூன்று வகைகளில் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றையும் பற்றி பார்ப்போம்.
படிவம்–ஏ என்பது வீடு கட்டும் மனைப்பிரிவுகளுக்கான விண்ணப்பமாகும். இந்த விண்ணப்பத்தோடு சொத்தின் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட வேண்டும். எனவே சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அமைப்பினால் திட்ட அனுமதி வழங்கப்பட்ட வீட்டு மனைகளை வாங்கினால் எந்த சட்ட சிக்கல்களும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
படிவம் –பி என்பது கட்டிடங்கள் கட்டுவதற்கும் ஏற்கனவே கட்டப்பட்ட
கட்டிடங்களுடன் சேர்த்து புதிய கட்டிடங்களை கட்டுவதற்கும் உரியதாகும். இதற்கு கட்டிடத்தின் திட்ட வரைபடத்தோடு அதைச் சுற்றி அமைந்துள்ள 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.
படிவம்– சி என்பது மிக பெரிய அளவில் அமைய இருக்கிற பலமாடி
கட்டிடங்கள் மற்றும் தொகுப்பு கட்டிடங்களுக்கு உரியதாகும். இந்த சிறப்பு வகை கட்டிடங்களுக்கு சி.எம்.டி.ஏ அமைப்பின் உறுப்பினர் செயலர் அங்கீகாரம் அளிக்கவேண்டியது கட்டாயமானதாகும்.
உறுதிமொழி படிவம்
திட்ட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும்போது உறுதி மொழி படிவத்தையும் கண்டிப்பாக இணைக்க வேண்டும். உறுதிமொழி அளிப்பதற்கான மாதிரி படிவமும் சி.எம்.டி.ஏ அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது. திட்ட அனுமதிக்கு உட்பட்டு கட்டிடம் கட்டுவதாகவும், சி.எம்.டி.ஏ நிர்ணயித்துள்ள அனைத்து கட்டணங்களையும் செலுத்துவதாகவும் உறுதிமொழி அளிக்கும் விதத்தில் அந்த படிவம் அமைந்திருக்கும். மேலும் அனுமதியை மீறி கட்டிடம் கட்டினால் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் கையொப்பம் இட வேண்டும்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள்
வீட்டு மனைகள் பிரிப்பதற்கான படிவம்– ஏ, கட்டிடங்களுக்கான படிவம்– பி, சிறப்பு வகை கட்டிடங்களுக்கான படிவம்– சி ஆகிய மூன்று வகையான விண்ணப்பங்களையும் சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அலுவலகங்களில் கேட்டு பெறலாம். தற்போது இந்த படிவங்களை சி.எம்.டி.ஏ மற்றும் டி.டி.சி.பி.யின் இணைய தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
வீடு கட்டுவதற்கான அனுமதி வேண்டுவதற்கு பெரும்பாலும் படிவம் –பி விண்ணப்பமே பயன்படுத்தப்படுகிறது. இந்த விண்ணப்பத்துடன் உரிமையாளரின் கையெழுத்து, குத்தகைதாரரின் கையெழுத்து, அனுமதி பெற்ற நில அளவையாளர் மற்றும் கட்டிட பொறியாளரின் கையெழுத்துகள், கட்டிடம் கட்டுவதற்கான திட்ட வரைபடம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
சி.எம்.டி.ஏ அனுமதி
தரைத்தளத்துடன் மூன்று மாடி சிறப்பு கட்டிடம், நான்கு அடுக்குக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.
Publish Your Free Add
கட்டிடங்கள் கட்டுவதற்கு சி.டி.எம்.ஏ அல்லது டி.டி.சி.பி. அமைப்பிடமிருந்து அனுமதி வாங்குவதோடு அந்த வேலை முடிந்துவிடுவதில்லை. கட்டுமானப் பணியின் ஒவ்வொரு நிலையிலும் விதிமுறைகள் ஒழுங்கான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதையும் கவனித்துக் கொள்ளவேண்டும் கட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்