அந்தப் பணத்தை என்ன செய்தீர்கள் என்று கேட்டால், ஜாலியாக செலவழித்தோம் என்றார்கள். மொபைல் வாங்கியிருக்கிறார்கள். விதம் விதமான பார்களில் குடித்திருக்கிறார்கள். அதில் ஒருத்தன் போதையில் தன்னுடைய இளம் காதலியிடம் உளறியதால் மாட்டிக் கொண்டார்கள். இல்லாவிட்டால் எங்களை யாரும் கண்டு பிடித்திருக்கவே முடியாது. தொழில் சுத்தமாய் அந்தக் கொள்ளையைச் செய்தோம் என்று சவால் விட்டார்கள். உங்களுக்குப் பயமாக இல்லையா என்கிற கேள்வியை அவர்களை நோக்கி வீசுவது அசட்டுத்தனமானது என்பதை அவர்களுடைய ஒவ்வொரு அசைவும் உணர்த்தியது. ஒருவேளை அந்த வீட்டில், நீங்கள் கொள்ளையடித்துக் கொண்டிருந்த போது யாராவது வந்தால் என்ன செய்திருப்பீர்கள்? கொன்றிருப்போம் என்று நிறுத்தி நிதானமாகச் சொன்னவனின் கண்களை உற்றுப் பார்த்தேன். துளி பயமில்லை. சாகசம் போல ஏதோவொன்று தெரிந்தது. எழுதிக் கொண்டிருக்கும் அஜ்வா நாவலுக்காக இது போல, சில இளைஞர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். பயமில்லாமல் குற்றவுணர்வில்லாமல் ஒரு சம்பவத்தை நிகழ்த்தும் ஒரு லேயர் பெருகி வருகிறது. இதில் வர்க்கப் பேதங்களெல்லாம் இல்லை. குடிசையில் இருப்பவனும் இருக்கிறான். பொறியியல் படிப்பவனும் இருக்கிறான். இவர்களை ஒன்றிணைக்கும் ஒற்றைப் புள்ளி விதம் விதமான போதை. இப்படியான இளைஞர்கள் அந்தரத்தில் இருந்து குதிப்பதில்லை. உங்கள் வீட்டிலிருந்தோ எங்கள் வீட்டிலிருந்தோதான் கிளம்பி வருகிறார்கள். கட்டற்ற சுதந்திரத்தைத் தருவது இருக்கட்டும். கண்காணிப்பும் அவசியம் என்பதைத்தான் நான் பார்த்த கதைகள் எனக்கு உணர்த்தின. கொன்றிருப்போம் என நிறுத்தி நிதானமாகச் சொன்ன சிறுவனின் வயது அதிகப்பட்சம் பதினைந்து இருக்கலாம்!
–
Saravanan Chandran