ஜல்லிக்கட்டு பிரச்னை எப்படி உருவானது?
பண்பாடு, கலாச்சாரம், உரிமை என்ற அடிப்படையில் விரிவாக விவாதிக்கப்பட்டு விட்டதால் எனது பதிவை பெரும்பாலும் சட்டம் சார்ந்து சுருக்கி கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஜல்லிக்கட்டுக்கான தடை எல்லோரும் நினைப்பது போல 2011-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் வெளியிட்ட காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளைகளை சேர்த்தவுடன் ஆரம்பிக்கவில்லை.
பிறகு மேல்முறையீட்டில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஜனவரி 2007-ல் பானுமதியின் தீர்ப்புக்கு தடை விதித்து அந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வழிகோலியது. இந்த வழக்கின் மேல்முறையீட்டின் போது தான் விலங்குகள் நல வாரியம் (AWBI ) உள்ளே வருகிறது. விசாரணைக்கு பிறகு 2007 மார்ச் மாதம் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பானுமதியின் தீர்ப்பை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறது. மேலும் ஒழுங்குமுறை சட்டம் இயற்றுமாறு உத்தரவிடுகிறது.
இதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். அங்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனவே மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டை. 2008ம் ஆண்டு வழக்கம் போல ஜனவரியில்உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்ட உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கிறது, வேண்டுமானால் ரேக்ளா ரேஸ் நடத்திக்கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையுடன் அனுமதிக்கிறார்கள். ஆனால் சில நாட்கள் கழித்து தமிழக அரசு (திமுக) சீராய்வு மனு போட்டு மீண்டும் அனுமதி கோருகிறார்கள். உச்ச நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதிக்கிறது. இதையொட்டி உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகளிலேயே ஜல்லிக்கட்டு நடக்கிறது. பிறகு திமுக அரசு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009 இயற்றுகிறது. அவ்வப்போது இடைக்கால அனுமதி வாங்கி ஜல்லிக்கட்டு நடத்தி எல்லாம் சுமுகமாக போய்கொண்டு இருக்கிறது.
2011-ம் ஆண்டு ஜூலை வாக்கில் ஹேமமாலினி அவர்கள் சுற்றுச்சுழல் துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். காளைகளை காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று. பல விலங்குரிமை பிரபலங்கள் ஆதரவளிக்கிறார்கள். (2011-ம் ஆண்டு தான் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தை எதிர்த்து PETA அமைப்பு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது). சர்ச்சைக்குரிய அறிவிக்கை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளை இணைத்து வெளியிடப்படுகிறது. (இதே ஆண்டு ஹேமமாலினிக்கு PETA PERSON OF the year விருது அளிக்கப்பட்டது, போன ஆண்டு தோழர் சன்னி லியோனிக்கு அளிக்கப்பட்டது என்பது உப தகவல் )
இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் தொடுக்கப்படுகின்றன. மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது ( கவனிக்க, இடைக்கால நிவாரணமாக மட்டுமே ). இறுதியாக ஜல்லிக்கட்டு தொடர்பான பல்வேறு வழக்குகளையும் இணைத்து விசாரித்து உச்சநீதிமன்றம் 2014-ம் ஆண்டு may மாதம் இறுதி தீர்ப்பு அளிக்கிறது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டம் மிருகவதை தடுப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் அறிவித்து விட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட தமிழக அரசின் சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இப்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது, பாஜக நம்மை நீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருக்க சொல்வது, கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த சொத்தை அறிக்கை சட்டப்படி செல்லத்தக்கதா இல்லையா என்பதே. சந்தேகமே வேண்டாம், நமக்கு பெரிய நாமக்கட்டி தான் கிடைக்கும். (2014 தீர்ப்பில் இருக்கும் குறைபாடுகளை தனியாக எழுத முயல்கிறேன்)
இப்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு என்ன வழி ? ஒரு பிரபல வழக்கறிஞர் அந்த 2011-ம் ஆண்டின் காட்சிப்படுத்த இயலாத பட்டியலில் இருந்து காளையை நீக்கினாலே போதுமானது, அல்லது அந்த அறிவிக்கையையே திரும்ப பெற்றால் போதுமானது, அவசர சட்டம் தேவையில்லை என்று தொலைகாட்சி ஊடகத்தில் சொன்னார். அது சரியானது அல்ல என்பதே எனது பார்வை. பிரச்சினை இப்போது அந்த அறிவிக்கை அல்ல. உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக ஜல்லிக்கட்டு என்பது இயல்பிலேயே ஒரு மிருகவதையுடன் கூடிய விளையாட்டு தான் என்று தீர்ப்பளித்து விட்டது. இதற்கு முன்பு உச்ச நீதிமன்றம் 2008ல் ஜல்லிக்கட்டை தடை செய்த போது ‘2011 அறிவிக்கை’ இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மிருகத்தையின் பேராலேயே பானுமதியும் தடை செய்தார். (பிறகு ஜல்லிக்கட்டு நடந்தது எல்லாம் இடைக்கால நிவாரணங்களின் மூலம் தான்)
எனவே இப்போது அதை எதிர்கொள்ள வேண்டுமென்றால் அவசர சட்டத்தின் வழியாக தான் செய்ய வேண்டும். சரி யார் பிறப்பிக்க வேண்டும்? மிருகவதை தடுப்பு சட்டம் மத்திய சட்டம் என்பதால் மத்திய அரசு தான் பிறப்பிக்க வேண்டும், அது தான் உடனடியானதும் எளிதானதும் கூட. ஆனால், அது தனியாக ஒரு சட்டமாக அல்லாமல் (தமிழக அரசு இயற்றிய தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் போல அல்லாமல் ) மிருக வதை தடுப்பு சட்டத்தையே திருத்த வேண்டும். எப்படி செய்வது ? எது எல்லாம் வதை (Cruelty) என்று சொல்லும் மிருகவதை தடுப்புச்சட்டம், அதற்கு விதிவிலக்குகளும் கொடுத்துள்ளது.
11. (3) Nothing in this section shall apply to –
(a) the dehorning of cattle, or the castration or branding or noseroping of any
animal in the prescribed manner, or
(b) the destruction of stray dogs in lethal chambers 20[by such other methods as
may be prescribed] or
(c) the extermination or destruction of any animal under the authority of any law
for the time being in force; or
(d) any matter dealt with in Chapter I V ; or
(e) the commission or omission of any act in the course of the destruction or the
preparation for destruction of any animal as food for mankind unless such
destruction or preparation was accompanied by the infliction of unnecessary
pain or suffering.
—–
28. Saving as respects manner of killing prescribed by religion : Nothing contained in
this Act shall render it an offence to kill any animal in a manner required by the
religion of any community.
அதாவது கொம்பை நீக்குவது, காயடிப்பது, தெருநாய்களை கொல்வது, உணவிற்காக கொல்வது, மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்துவது அல்லது மதநம்பிக்கைகளுக்காக பலியிடுவது மிருகவதையில் வராது. எனவே இந்த விதிவிலக்கு பட்டியலில் ஜல்லிக்கட்டையும் சேர்க்க வேண்டும். இதை தான் மத்திய அரசு போன வருடம் செய்திருக்க வேண்டும். ஆனால், அதை விட்டு விட்டு சட்ட பாதுகாப்பில்லாத நீதிமன்றம் தூக்கி எறியக்கூடிய ஒரு சொதப்பலான அறிவிக்கையை பாஜக வெளியிட்டு விட்டு, நாங்கள் நடவடிக்கை எடுத்தோம் என்று சொல்வது கயமைத் தனமின்றி வேறில்லை. அதுவும் அந்த அறிவிக்கை காளையை காட்சிப்படுத்துதல் பட்டியலில் இருந்து கூட நீக்கவில்லை, மாறாக காளையை அந்த பட்டியலில் வைத்துக்கொண்டே ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்றது! முதலாம் ஆண்டு சட்டம் படிப்பவனுக்கு கூட இது எவ்வளவு மடத்தனமானது என்று புரிந்து கொள்ள முடியும். இதையும் விட்டு விடுங்கள். அப்போது தெரியாது என்று சொல்பவர்கள் 2014-ம் ஆண்டு தீர்ப்பு வந்த பிறகு தெரிந்திருக்க வேண்டாமா..? உச்ச நீதிமன்ற தீர்ப்பின் operative portion இப்படி தான் ஆரம்பிக்கிறது
….77 (1) We declare that the rights guaranteed to the Bulls under Sections 3 and 11 of PCA
Act read with Articles 51A(g) & (h) are cannot be taken away or curtailed, except
under Sections 11(3) and 28 of PCA Act…
அதாவது மிருகங்களுக்கான உரிமைகள், சட்டப்பிரிவுகள் 11 (3) மற்றும் 28 ஐ தவிர வேறு எந்த விதத்திலும் பறிக்கபட முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டது. எனவே ஜல்லிக்கட்டை இந்த பிரிவுகளில் சேர்ப்பது தான் உடனடியாக செய்ய வேண்டியது. சரி, அப்படியே சேர்த்தாலும் அது இந்த மிருகவதை சட்டத்தின் நோக்கத்திற்கும் அரசியலமைப்புச்சட்டத்திற்கும் விரோதமானது என்று விலங்குநல ஆர்வலர்கள் நிதிமன்றதை அணுகலாம். ஆனால், இவ்வளவு பெரிய மக்கள் போராட்டத்திற்கு பிறகு நீதிமன்றம் அவ்வாறு சொல்லாது என்பதே நிதர்சனம்.
மத்திய அரசுக்கு இதை விட எளிதான வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா என்று தெரியவில்லை. காவிரி நீர் வேண்டுமென்றால் கர்நாடகாவை சமாளிக்க வேண்டும், ஈழம் வேண்டுமென்றால் அடுத்த நாட்டின் ‘இறையாண்மை’ பாதிக்கப்படும். எந்த வித சிக்கலுமே இல்லாத மிக எளிதான கோரிக்கையில் கூட நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று சொல்வதற்கு உண்மையிலேயே மிகவும் தடித்த தோல் வேண்டும். மோடி தைரியமானவர் என்று பாஜகவினர் சொல்லும் போது எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் புல் டாஸ் பாலில் டொக் வைப்பதற்கு முரட்டுத்தனமான குருட்டுத்தனமும், குருட்டுத்தனமான தைரியமும் வேண்டும். அது தான் நம்மாளிடம் நிறையவே இருக்கிறதே 🙂 அதை ஆதரிப்பதற்கும் இங்கே ஆட்கள் இருக்கிறார்களே. பிறகு என்ன
கவலை?
மிகப்பெரிய காமெடி என்னவென்றால் முதல்வரின் கோரிக்கைக்கு மோடியின் பதில் ‘வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது, எனவே ஒன்றும் செய்ய இயலாது’. விருமாண்டி படத்தில் கமல் அவர் அம்மா இறந்தவுடன் குடித்து விட்டு சலம்பிக்கொண்டிருப்பார். அப்போது சண்முகராஜா ‘இங்க பாரு விருமாண்டி இப்போ நீ குடிச்சிருக்க’ என்று ஆரம்பிப்பார். அப்போது கமல் ‘ஏ இந்தா பாருடா போலீஸ் கண்டுபிடிச்சுருச்சு’ என்று சொல்வார். அது தான் ஞாபகத்திற்கு வருகிறது.
கடைசியாக, இதைவிட பெரிய வாழ்வாதார ஜீவாதார பிரச்சினைகளுக்கெல்லாம் போராடாமல் இது போன்ற ‘சிறிய’ பிரச்சினைக்கு மாணவர்கள் போராடுவதற்கு சில மொண்ணை அறிவுஜீவிகள்வழக்கம் போல துருப்பிடித்த பிளேடை வைத்து வழு வழு கன்னத்தில் தேய்ப்பது போல மொழியை திருகி, வளைத்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது பல்லாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்ட உணர்வு வெளிப்படுவது என்பதை தாண்டி இந்த ‘சிறிய’ உரிமையை கூட பெற்றுத்தர ஆட்சியாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் வக்கில்லை என்றே அரசியல்வாதிகளை காறி உமிழ்ந்து களத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. வாயிலும் வயிற்றிலும் அடித்தது பத்தாது என்று அவன் கையில் இருந்த கிலு கிலுப்பையும் பிடுங்கினால் அழ மட்டும் செய்யாது குழந்தை, ஏதாவது எதிர்ப்பை காட்ட தான் செய்யும். இதை தாண்டி எனக்கு ஒரு கேள்வி..? எல்லா வாழ்வாதார ஜீவாதார போராட்டங்களுக்கும் மாணவன் தான் போராட வேண்டுமா? அப்புறம் என்ன ஹேருக்கு இங்கே ஆட்சியாளர்கள், மத்திய மாநில அரசுகள்?
இங்கு PETA பற்றி பலரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், விலங்குகள் நல வாரியம் (AWBI) என்ற மத்திய அரசின் கீழ் வரும் அதிகாரப்பூர்வ அமைப்பையோ அல்லது Beauty without Cruelty, Compassion Unlimited Plus Action உள்ளிட்ட NGOக்களை வெளியில் தெரியாது. ஆனால், இவர்கள் செய்த ‘சாதனைகள்’ கொஞ்சம் நஞ்சம் அல்ல. (இவற்றை விரிவாகஅடுத்த பதிவில் பார்க்கலாம்).
பின்குறிப்பு: PETA சர்வதேச சதி, A 1, A2 பால், நாட்டு மாடு ஒழிப்பு இது பற்றி எனக்கு தெரியாது. தனிப்பட்ட முறையில் இதை நம்புமாறு இதுவரை நான் எதுவும் படிக்கவில்லை
ஜல்லிக்கட்டு பிரச்னை எப்படி உருவானது? மிக விரிவான போஸ்ட். இதைத் தவறாம படிங்க. ஒரு வழக்கறிஞரின் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது. படிச்சிட்டு இவரோட போஸ்ட்டை கட்டாயம் பகிரவும்.
Thanks on Written By
RajaGopal Subramanian
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக