அல்லிராஜா சுபாஸ்கரன் | | | |
லைக்கா ஈழத் தமிழருக்கு கட்டிக் கொடுத்தது 150 வீடுகள் மட்டுமே. ஆனால், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு கொடுத்தது இரண்டு மில்லியன் பவுன்ஸ். கடந்த வருடம் வரி கட்டாமல் பதுக்கிய பணம் இருபது மில்லியன் பவுன்ஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் இலங்கை செல்வதாக வெளிவந்த தகவல், பலதரப் பட்ட வாதப் பிரதிவாதங்களையும், எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியதால், அந்தப் பயணத்தை இரத்து செய்வதாக ரஜனி அறிவித்திருந்தார்.
ரஜனியின் வருகை சம்பந்தமாக ஊடகங்களில் வெளியான தகவல் இது:
//லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார். வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை. லைகா அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகை அவர்களின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது.//
வீடுகள் கட்டிக் கொடுப்பது என்பது ஒரு வியாபார “போட்டி” அல்ல. அது முதலீட்டுக்கான அருமையான வாய்ப்பு. ஒரு நாட்டில் போர் முடிந்த பின்னர், அழிவில் இருந்து மீளக் கட்டியெழுப்ப முதலாளிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள். ஏற்கனவே ஆப்கானிஸ்தான், ஈராக்கில் பெரிய அளவில் நடந்தது. அமெரிக்க அரசே டென்டர் போட்டு யார் யாரெல்லாம் முதலிடலாம் என்று தெரிவு செய்தது.
அங்கெல்லாம் முதலிடும் அளவிற்கு லைக்காவிடம் மூலதன பலம் கிடையாது. அது அந்தளவு பெரிய நிறுவனம் அல்ல. ஆனால், இலங்கையில் முதலிடும் அளவிற்கு லைக்காவிடம் பண பலம் உள்ளது. “இலவச” வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் பின்னணியில், எதிர்காலத்தில் ஏதோ ஒரு தொழிற்துறையில் முதலீடு செய்யும் நோக்கம் இருக்கலாம்.
லைக்கா நிறுவனம், ஐரோப்பாவில் வரி கட்டாமல் ஏமாற்றி, வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடித்த பணத்தில் தான், வவுனியாவில் 150 வீடுகள் கட்டப் பட்டன. உண்மையில் அந்த “தான தர்மம்” கூட, லைக்கா பிரிட்டிஷ் அரசியல்வாதிகளுக்கு கொடுத்த லஞ்சப் பணத்தை விடக் குறைவு!
முன்னாள் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு அல்லது கன்சவேர்ட்டிவ் கட்சிக்கான நிதியாக, £2.2 மில்லியன் பவுன்ஸ் “தானம்” செய்திருந்த விடயம் ஏற்கனவே அம்பலமானது. முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜோன்சனின் தேர்தல் செலவையும் லைக்கா பொறுப்பேற்றிருந்தது.
லைக்காவின் மொத்த வருடாந்த வருமானம் சுமார் 1.5 பில்லியன் பவுன்கள். பிரித்தானியாவில் வரி கட்டாமல் ஏமாற்றிய பணம், போர்த்துக்கலுக்கு சொந்தமான மாடேயிரா தீவில் உள்ள வங்கிகளில் இரகசியக் கணக்கில் வைப்பிலிடப் படுகின்றது. வருமான வரி மட்டுமல்ல, மதிப்புக் கூட்டு வரியும் (VAT) கட்டாமல் பெருந்தொகைப் பணம் பதுக்கப் படுகின்றது. இதற்கென இருபதுக்கும் குறையாத போலி நிறுவனங்கள் இயங்குகின்றன. சட்டவிரோத கருப்புப் பணத்தை தூய்மைப் படுத்துவதும், அதை இரகசிய வங்கிக் கணக்குகளில் பதுக்குவது மட்டுமே இந்தப் போலி நிறுவனங்களின் வேலை.
லண்டன் தபால் நிலையங்களில் ஒவ்வொரு நாளும் கட்டுக் கட்டாக பண நோட்டுக்கள் அடங்கிய பார்சல்கள் அனுப்பப் படுவது கண்டுபிடிக்கப் பட்டது. அதை அடுத்து, பாரிஸ் நகரில் உள்ள லைக்கா கிளை அலுவலகம் கடந்த வருடம் பொலிஸ் சோதனைக்கு உள்ளானது. அங்கு 130,000 யூரோ தாள்களும், மேலதிகமாக வங்கியில் இருந்த 850,000 யூரோக்களும் பறிமுதல் செய்யப் பட்டன. பிரான்ஸில் பதினேழு மில்லியன் யூரோ வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில் பிரெஞ்சுக் கிளை நிர்வாகி Alain Jochimek உட்பட ஒன்பது பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப் பட்டது.
மேலும் இங்கே இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன், ஐரோப்பிய தீவிர வலதுசாரி அரசியல்வாதிளுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார். பாரிஸ் பொலிஸ் சோதனையில் பிடிபட்டு கம்பி எண்ணிய அலென் ஜோகிமிக், இஸ்ரேலிய அரசுடன் தொடர்புடைய யூத வலதுசாரி நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். பிரிட்டனில், முன்னாள் பிரதமர் டேவிட் கமேரூன், முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜோன்சன் போன்றோர் கன்சவேர்ட்டிவ் கட்சியை சேர்ந்த வலதுசாரிகள். கன்சர்வேட்டிவ் கட்சி, ஈழப்போர் நடந்த காலத்தில் வெளிப்படையாகவே சிறிலங்கா அரசை ஆதரித்திருந்தது.
தமிழ்த் தேசியவாதிகளின் அரசியல் அகராதிப் படி, “லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன் ஒரு இனத் துரோகி!” இருப்பினும், ஈழத் தமிழ்த் தேசியவாதிகள் யாரும் லைக்காவின் கிரிமினல் வேலைகளை கண்டுகொள்வதில்லை. அது அவர்களது வர்க்கக் குணாம்சம். அவர்கள் யாரும் உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் அல்ல, மாறாக முதலாளித்துவ ஆதரவு வலதுசாரிகள்.
//”லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன் ஒரு “ஈழத் தமிழர்”. “தனது செலவில்(?)” தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தார்…”// என்று போலித் தமிழ்த்தேசியவாதிகள் லைக்காவின் கிரிமினல் குற்றங்களுக்கு துணைபோகின்றனர். இனம் இனத்தோடு தான் சேரும். வர்க்கம் வர்க்கத்தோடு தான் சேரும். பணம் பணத்தோடு சேரும்.
எதிர்பார்த்த மாதிரியே அரசியல் நீக்கம் செய்யப் பட்டவர்கள், சமூக வலைத்தளங்களில் ரஜனிகாந்துக்கு எதிராகவே கம்பு சுற்றுகிறார்கள். “லைக்கா மாமா நல்லவராம், ரஜனி மாமா கெட்டவராம்!” என்று குழந்தை – ஊடகவியலாளர் ஒருவர் சிணுங்குகிறார். இவர் கஜேந்திரகுமார் – விக்னேஸ்வரன் தலைமையில் நம்பிக்கை வைத்திருப்பவர். அவரைப் போன்றே தீவிர வலதுசாரிகளான த.தே.ம.மு. கட்சி ஆர்வலர்கள், ஆதரவாளர்கள் பிரபல நடிகரான ரஜனிகாந்திற்கு எதிராக கம்பு சுற்றுவதன் மூலம், லைக்காவின் குற்றங்களை மறைப்பதற்கு உதவுகிறார்கள்.
திரைப்பட தயாரிப்பாளரான லைக்கா நிறுவனம் நினைத்தால் ரஜனியை மட்டுமல்ல, நமீதாவையும் கூட்டி வந்து விளம்பரம் தேட முடியும். எய்தவன் இருக்க அம்பை நோவது மாதிரி, முதலீட்டாளர் இருக்க கூத்தாடிகளை எதிர்க்கிறார்கள். இது அவர்களது முதலாளிகளுக்கு ஆதரவான வர்க்கக் குணாம்சத்தின் வெளிப்பாடு.
இந்த விடயத்தில் ரஜனிகாந்த் நல்லவர் என்று சொல்ல வரவில்லை. அவருக்கும் சில அரசியல் ஆதாயங்கள் இருக்கலாம். தனக்கு எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தே தனது இலங்கைப் பயணம் தொடர்பான தகவலை வெளிவிட்டிருக்கலாம். ஒரு காலமும் அரசியல் பேசாத ரஜனி, பயணத்தை ரத்து செய்வது தொடர்பாக விளக்கமளித்த கடிதத்தில் அரசியல் பேசி இருக்கிறார்.
ஏற்கனவே, ரஜனிகாந்த் தன்னை இந்துத்துவா சார்பானவராக காட்டி வந்துள்ளார். இந்தக் கடிதத்திலும் புலிகளின் ஈழ விடுதலைப் போரை “புனிதப் போர்” என்று குறிப்பிடுள்ளார். இவ்வளவு காலமும் ஒன்றில் கிறிஸ்தவ, அல்லது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மட்டுமே புனிதப் போர் என்ற கருதுகோளை கொண்டிருந்தனர். தற்போது இந்து மத அடிப்படைவாதிகள் அதைப் பின்பற்றத் தொடங்கி உள்ளனர். புலிகளின் ஈழ விடுதலைப் போர், இந்துத்துவா வாதிகளின் கண்களுக்கு புனிதப் போராகத் தெரிகின்றது.
லைக்கா இலங்கைக்கு அழைப்பதாக சொன்னதும், அதற்கு எழுந்த எதிர்ப்பும், அதன் விளைவாக பயணத்தை இரத்து செய்ததும் முன்கூட்டியே திட்டமிடப் பட்ட நாடகமாக இருக்கலாம். இவர்கள் எல்லோரையும் பாஜக பின்னால் இருந்து ஆட்டுவித்திருக்கிறது.
ரஜனிகாந்தின் கடிதத்தில் பாஜக அரசியலே தொக்கி நிற்கிறது. அத்துடன் ரஜனியின் வருகையை எதிர்ப்பதாக காட்டிக் கொண்ட ஈழத் தமிழ்த் தேசியவாதிகளும், மறைமுகமான இந்திய அடிவருடிகள் தான். அவர்கள் ஏற்கனவே, இந்து மதவெறி அமைப்பான, சிவசேனையின் வருகையை வரவேற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
Written By Kalai Marx