மோடியை விமர்சித்தால் அது தேச துரோகமா ? போராட்டத்தில் தேச விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்பது வழக்கமான பா.ஜ.க ப்பாட்டு.
ஜே.என். யூவில் அவர்கள் செய்ததை ஐ, ஐ.டியில் அவர்கள் செய்ததை இப்போது மெரீனா போராட்டத்திலும் செய்கிறார்கள்.
மொழி உரிமைக்கு, இன உரிமைக்குப் போராடுவது தேச விரோதம் என்றால் அந்தத் துரோகத்தை ஒவ்வொரு தமிழர்களும் மனமுவந்து செய்வார்கள்.
தேசிய கொடி அவமதிக்கப்பட்டது போன்ற விஷயத்தை யாராவது செய்திருந்தால் அவர்களை விசாரிக்கவேண்டுமே தவிரஒட்டு மொத்த மக்களையும் ஏன் தண்டிக்க வேண்டும்? மோடியை விமர்சித்தால் அது தேச துரோகமா ? அவர் என்ன கடவுளா?
கடவுளையே விமர்சித்த மண் இது. ஒசாமா பின்லேடன் படம் ஸ்கூட்டரில் ஒட்டி இருந்தது என்றெல்லாம் ஒரு முதலமைச்சர் கூச்சம் இல்லாமல் சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்போலப் பேசுகிறார்.
பின்லேடன் படம் ஒன்றும் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட படம் இல்லையே? அதை ஒருவர் வைத்துக்கொள்ளக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா?
மகத்தான மக்கள் எழுச்சியை பொறுக்கிகள் போராட்டம் என்று சொன்ன சுப்பிரமணியம் சுவாமிக்கும் போராடிய மக்களை வன்முறையாளர்கள்
என்றுசொல்லும் இன்றைய முதல்வருக்கும், அவருக்கும் கீழே இருக்கும் காவல்துறைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
மெரீனாவில் தேசிய கீதத்தை இசைத்துக்கொண்டும் அப்துல் கலாம் படத்தை வைத்துக்கொண்டும் பலரும் போராடிகள்,
அவர்களும் தேசவிரோதிகளா” சமூக விரோதிகளா? முதலமைச்சர் போராடும் இளைஞர்களின் கண்ணியத்தைப் பாராட்டிய 24 மணி நேரத்தில் அவர்களைச் சமூக விரோதிகள் என்கிறார்.
இளைஞர்களின் எழுச்சியை யுகப்புரட்சியாய் விளம்பர இடைவேளை இன்றிக் காட்டிய ஊடகங்கள் இப்போது அவர்களைச் சமூக விரோதிககளாகக் காட்டும் கருத்துக்களை இடைவிடாமல் ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன.
உண்மையில் இவர்கள் எல்லாம் எப்போதாவது மக்கள் பக்கம் மனப்பூர்வமாக நின்றிருக்கிறார்களா?
(உயிர்மை ‘ மெரீனா தமிழ் வசந்தம்’ சிறப்பிதழுக்கு எழுதிக்கொண்டிருக்கும் தலையங்கத்திலிருந்து)
மோடியை விமர்சித்தால் அது தேச துரோகமா ?
Written By Manushya Puthiran