‘முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா நிச்சயம் மிரட்டியிருப்பார்” என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து இசையமைப்பாளர் கங்கை அமரன் நமக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டி.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு என்ன காரணம்?
என்னுடைய கருத்து யாருக்கும் ஆதரவு கிடையாது. தமிழ்நாட்டின் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து விட்டு மனக்குமுறலுடன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரது மனநிலையை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. பேட்டியின் போது சசிகலா, மிரட்டியதாக தெரிவித்தார். நிச்சயம் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பையனூர் பங்களாவை சசிகலா என்னிடம் எப்படி மிரட்டி வாங்கினார் என்பது எனக்குத் தெரியும். அதுபோல இன்னும் சில வி.வி.ஐ.பி.க்களிடமிருந்து சசிகலா தரப்பு சொத்துக்களை மிரட்டி வாங்கி உள்ளது.
உங்களை சசிகலா எப்படி மிரட்டினார்?
பையனூர் பங்களாவை அபகரிக்க நினைத்த சசிகலா தரப்பு, முதலில் அதுதொடர்பாக என்னிடம் பேசவில்லை. மாறாக அ.தி.மு.க.வின் குழும தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்த என்னை நிர்ப்பந்தித்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அப்போது, முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அவரது அலுவலகத்திலிருந்து என்னுடைய வீட்டுக்குப் போனில் பேசியவர்கள், என் மனைவியை மிரட்டி உள்ளனர். கங்கை அமரன் என்ன பெரிய ஆளா, ஜாக்கிரைதையாக இருக்கச் சொல்லுங்கள். அவர் எங்களை மீறி செயல்பட்டால் அவ்வளவுதான் என்று சொல்லி உள்ளனர். இதனால் என்னுடைய மனைவி மிகவும் பயந்து விட்டார். ஸ்டுடியோவில் இருந்த எனக்கு போனில் தகவல் தெரிவித்தார். உடனடியாக நான் சசிகலாவிடம் போனில் பேசினேன். அதற்கு அவர், அப்படியா… நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இதன்பிறகு அதுபோன்ற மிரட்டல் போன் அழைப்புகள் இல்லை. ஆனால் என்னுடைய வீட்டை போலீஸார் மப்டியில் கண்காணித்தனர். என்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும் அவர்கள் கண்காணித்தனர். இவ்வாறு மறைமுகமாகவே எனக்கு சசிகலா தரப்பிலிருந்து மிரட்டல்கள் வந்தன. பையனூர் பங்களாவை என்னிடமிருந்து பெறப்பட்ட போது எனக்கு வேறு இடத்தில் 2 ஏக்கர் இடம் தருவதாக தெரிவித்தனர். ஆனால் அந்த வாக்குறுதியை சசிகலா நிறைவேற்றவில்லை.
சசிகலாவை நீங்கள் எதிர்ப்பதற்கு இதுமட்டும்தான் காரணமா?
சசிகலா குடும்பத்தினர் பலரிடமிருந்து சொத்துக்களை வாங்கி குவித்து விட்டனர். இதன்பிறகும் அவர்கள் தங்களது செயல்பாட்டிலிருந்து மாறவில்லை. மக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் பதவி ஆசையில் சசிகலா செயல்படுகிறார். ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்த சசிகலா, அவரது மறைவுக்குப்பிறகு ஜெயலலிதாவின் பதவியில் அமர ஆசைப்படலாமா. ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம் நடத்தி, கட்சியினரிடையும், மக்களிடையையும் ஆதரவை பெறாமல் முதல்வராக சசிகலா ஆசைப்படுகிறார். தமிழகத்தில் குடிநீர் பிரச்னை, வறட்சி, விவசாயிகள் தற்கொலை என பல பிரச்னைகளில் அக்கறை செலுத்தாமல் சசிகலா பதவியேற்பதிலேயே ஆர்வமாக இருக்கிறார். இதுபோல சசிகலாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் நான் மட்டுமல்ல… மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது.
நீங்கள் பா.ஜ.க.வில் இருந்து கொண்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கலாமா?
தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை மக்கள் சம்பந்தப்பட்ட பொதுப் பிரச்னை. பொது வாழ்க்கை, மக்கள் சேவையில் வருபவர்களுக்கு ஏதேனும் உண்மை சார்ந்த குற்றச்சாட்டுக்கள் இருப்பினும் அதை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது ஒரு அரசியல்வாதியான என்னுடைய கடமையாகும். அவ்வாறு குற்றச்சாட்டு வைப்பதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், சசிகலாவுக்கு எதிரியாகவும் கருதக்கூடாது. பா.ஜ.க.வைச் சேர்ந்த நான், என்றும் என்னுடைய தேசத்துக்கும், தேச மக்களுக்கும் நேர்மையான மக்கள் தொண்டாற்றுவதிலேயே கடமை கொண்டு இருக்கிறேன். பா.ஜ.க.வில் இருப்பதில் பெருமைக் கொள்கிறேன்” என்றார்.
Thanks By Anandhavikatan
இந்த வலைப்பதிவில் தேடு
'சசிகலா இப்படித்தான் மிரட்டுவார்!' கங்கை அமரன் அனுபவக் கதை
H I'm Syed Abutahir from Chennai, Addicted to Learn & teaching SEO