வைத்தீஸ்வரி கொலையில் இருக்கும் மர்மம் காவல் துறையின் அலட்சியம்
வைத்தீஸ்வரி கொலையில் இருக்கும் மர்மம்! காவல் துறையின் அலட்சியம், சகோதரி வைத்தீஸ்வரி வேலை பார்க்கும் கடை வழியாகதான் தினமும் பலமுறை சென்று வந்திருக்கிறேன் என்ற உணர்வே மனவலியை அதிகமாக்குகிறது
கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு மேலாக கடத்தி வைத்திருந்து வன்புணர்ச்சி செய்து, கொடூரமாக கொலை செய்துள்ளார்கள் என தெரியவருகிறது
காலை வைத்தீஸ்வரியின் மரணத்தை அறிவித்த காட்சி ஊடகம், “16 வயது பெண் மரணம், கற்பழித்து கொல்லப்பட்டதாக பெற்றோர் புகார்” என்று செய்தி போடுகிறார்கள்.
நிர்வாண நிலையில் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டு கிடக்கிற பெண்ணை, வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டவள் என ஒப்புக்கொள்ளவே, இந்த ஈனபுத்தி ஊடகங்கள் தயங்குகிறது என்றால் ஊடகங்களின் யோக்கியதை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
அப்புறம், காக்க காக்க, சாமி போன்ற படங்களை பார்த்தாவது சட்டம் ஒழுங்கின் காப்பிரைட்தாரர்கள் குறித்து நாம் சற்று ஆறுதலடைந்து கொள்வோமாக..
வைத்தீஸ்வரி கொலைக் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி நடக்கிறது, அலட்சியமாக இருந்துவிடாதீர்கள் என்று, யாரோ ஒரு மனசாட்சி உள்ள காவலர் சொன்ன செய்தியை கேட்டு விசிக நிர்வாகிகள் அடுத்தக்கட்ட நகர்வை முன்னெடுப்பதற்கு முன்பாகவே ஒத்திகைகள் கட்சிதமாக அரங்கேறிவிட்டதாக விசிக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.
காலை குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பேரை, கிடப்பில் போட்டுவிட்டு, வைத்தீஸ்வரியை காதலித்த இளைஞனை கொலையாளியாக்கிட அனைத்து முயற்சிகளும் நடப்பதாக விசிக தரப்பும், பரதூர் கிராமவாசிகளும் தெரிவிக்கிறார்கள்..
வைத்தீஸ்வரியின் உடலில் நடத்தப்பட்டுள்ள வெறியாட்டங்களை, இவர்கள் கூறுவதைப்போல தனி நபர் செய்துவிடுவது சாத்தியமில்லை என்று மக்கள் அடித்து பேசுகிறார்கள்.
வைத்தீஸ்வரி கொலையில் ஏற்கனவே குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்பட்டவர்களில் ஒரு நபர், ஏற்கனவே கொலை வழக்குகளில் தொடர்புள்ள நபர் என தெரியவருகிறது
இதையடுத்து காவல்துறையை கண்டித்தும், பிணக்கூறாய்வு அறிக்கையின்படி செயல்படக்கோரியும் நாளை நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு திருமாவளவன் அவர்களும் சிதம்பரம் வரவிருப்பதால், வைத்தீஸ்வரி கொலை பிரச்சனை பரபரப்பை எட்டியுள்ளது.
தோழர்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்தபின், வைத்தீஸ்வரி வேலை பார்த்த கடை வழியாகவேதான் வந்தேன்.
தமது கடை ஊழியரான பதினாறு வயது சிறுமி படுகொலைக்கான எவ்வித சலனமும் இன்றி, அந்த ஐவுளிக்கடையில் வழக்கம் போலவே வியாபாரம் நடத்திக்கொண்டிருந்தார்கள்
பரதூர்வாசிகளும், விசிகவினரும் கூறுவதைப் போல, ‘வைத்தீஸ்வரியின் படுகொலையில் தொடர்புடைய கயவர்களை பிடிப்பதால், இரு சமூகங்களுக்கிடையே மோதல் வரும்’ என்ற உயரிய நோக்கத்திற்காகவெல்லாம் சம்மந்தமில்லாதவர்கள் தலையை உருட்ட முயலாமல், கொலைகாரர்கள் யாராக இருந்தாலும் காவல்துறையால் கைது செய்யப்படவேண்டும்.
பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் தீவிரமடைகிறதே தவிர குறைந்தபாடில்லை.
வெட்கக்கேடு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக