தன் மகனைக் கொன்றவர்கள் என யார் பெயரையும் சொல்ல மறுத்த இமாம்
சென்ற வாரம் நான் ஜார்கண்டில் இருந்தபோது அடுத்த நாள் இராம நவமி. அப்போதே ராஞ்சியில் பெருங்கூட்டம் திரண்டிருந்தது. இராணுவமும் ஆங்காங்கு நிறுத்தப்பட்டிருந்தது அன்றைய Hindustan Times நாளிதழில் ராமநவமி ஊர்வலத்தில் கலந்து கொள்ள இருப்பவர்கள் கூர் வாள்களைக் கடையில் வாங்கும் காட்சி படமாக வந்திருந்தது. எங்களுக்குத் தெரிந்த ஒரு வங்கப் பெண்மணி, “நீங்கள் நாளை ஊருக்குப் போவதாக இருந்தால் ரயில், பஸ் எதிலும் போக முடியாது. ஏர்போர்ட்டுக்குக் கூட இங்கிருந்து போவது சிரமம்” என எச்சரித்தார். நாங்கள் அன்றிரவே டெல்லி செல்ல முன் கூட்டியே ராஜதானி எக்ஸ்பிரசில் டிக்கட் ரிசர்வ் செய்திருந்தோம்
இது தேர்தல் ஆண்டு
இந்த ஆண்டு ராம நவமி கலவரங்களோடு அரங்கேறியுள்ளது இது தேர்தல் ஆண்டு எந்த அளவுக்குக் கலவரங்கள் வெடிக்கின்றனவோ அந்த அளவுக்குப் பயன் என அவர்கள் நினைத்திருக்கலாம்
அசன்சாலில் (மே.வங்கம்) நடந்த வன்முறையில் மிகப் பெரிய இரத்தக் களறியாக அது மாறாமல் தடுத்த ஒரு இமாம் பற்றிய செய்தி இரண்டு நாட்களாக நாளிதழ்களில் வந்தவண்ணம் உள்ளன.
அப்படித் தடுத்தவர் தன் 16 வயது மகனை வன்முறைக்குப் பலி கொடுத்தவர். நூரானி மசூதியின் இமாம் மவுலானா இம்தாதுல் ரஷீதி.
பத்தாம் வகுப்புப் படிக்கும் அவரது மகன் ஷிப்துல்லா (16) அசன்சாலில் வன்முறை வெடித்த அன்று காணாமற் போனான். காவல்துறையில் மகனைக் காணோம் எனப் பதிவு செய்ததோடு ரஷீதி வேறொன்றும் செய்யவில்லை.
நான்கு நாட்களுக்கு முன் அவன் உடல் கிடைத்தது. அவன் அடித்தே கொல்லப்பட்டுள்ளான். அவனுக்கான இறுதி அஞ்சலித் தொழுகையின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர். உணர்ச்சிப் பெருக்கும், ஆத்திரமும், ஆவேசமும் நிறைந்திருந்த அந்தச் சூழலில் அமதி தவழ நின்றது இமாம் ரஷீதி ஒருவர்தான்
ஒரு சிறிய உரையை நிகழ்த்தி, அனைவரையும் அமைதியாகக் கலைய அவர் கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோது கண்ணீருடன் கலைவததைத் தவிர திரண்டிருந்த மக்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.
thecitizen.in லிருந்து இமாம் ரஷீதியைத் தொடர்பு கொண்ட போது அவர் சொன்னார்
வன்முறையை நாடாதீர்கள்
“அல்லாவால் அருளப்பட்ட வாழ்வை அவன் வாழ்ந்து முடித்துவிட்டான். இனி இன்னொருவரின் குழந்தை இப்படிக் கொல்லப்படாமல் தடுப்பதும் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதும்தான் நம் கடமை. நீங்கள் அவன்மீதும் என் மீதும் அன்பு கொண்டவர்களானால் வன்முறையை நாடாதீர்கள் அமைதிக்கு வழி வகுங்கள்…”
இப்படியாகச் சொல்வதற்கு எத்தனை மனத்திடம் வேண்டும் எனப் பதிலுறுத்தபோது அவர் கூறியவை
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. என்னுடைய மகன் இறந்து போனான் இனிமேல் அது பற்றி நாம் ஒன்றும் செய்ய முடியாது இனி இப்படி இன்னொரு குழந்தை கொல்லப்படாமலும், இன்னொரு வீடு எரிக்கப் படாமலும், இன்னொரு குடும்பம் இப்படியான துயருக்கு ஆளாகாமலும் உறுதி செய்வதுதான் நமது பணியாக இருக்க முடியும் மக்கள் பழிவாங்கத் துடிக்கின்றனர் ஆனால் என்னுடைய அசன்சாலில் , என்னுடைய இந்த நகரத்தில் என்னுடைய இந்த நாட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவுவது அவசியம் என்பதை நான் அறிவேன்..”
இன்றைய Hindustan Times நாளிதழில் இன்னொரு செய்தி நம்மை நெகிழ வைக்கிறது
தன் மகனை யார் கடத்திச் சென்று கொன்றிருக்க முடியும் எனக் காவல்துறையினர் கேட்கும் கேள்விக்கு இமாம் ரஷீத் எந்தப் பதிலையும் சொல்ல மறுத்துள்ளதோடு அதில் அவர் உறுதியாகவும் உள்ளார்
“என் மகன் கொல்லப்பட்டதை நான் கண்ணால் பார்க்கவில்லை நான் யார் மீதும் ஐயம் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டக் கூடாது என முடிவு செய்துவிட்டேன் ஏனெனில் நான் யாரையும் பார்க்கவில்லை அப்பாவிகள் யாரும் பிரச்சினைக்குள்ளாவதை நான் விரும்பவில்லை நான் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள். இருக்கட்டும் இயன்றால் அவர்களே கண்டுபிடிக்கட்டும்..”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக