உலக கோப்பை ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் 5 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகளை தோற்கடித்து கம்பீரமாக கால்இறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணியின் திடீர் எழுச்சியை பார்த்து விமர்சனவாதிகள் வாயடைத்து போய் நிற்கிறார்கள். இந்திய அணி இந்த 5 போட்டிகளிலும் எதிரணியை ஆல் அவுட் செய்தது.
அதேபோல், இன்று நடைபெற்ற ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டியில் அந்த அணியை 287 ரன்களுக்குள் இந்திய அணி ஆட்டமிழக்கசெய்தது. இதன் மூலம் இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் புதிய வரலாறு படைத்துள்ளது. அதாவது இந்திய அணி லீக் போட்டிகளில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் எதிரணியின் விக்கெட்டுகளை முழுமையாக வீழ்த்தியுள்ளது. 6 போட்டிகளில் விளையடியுள்ள இந்திய அணி 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. நடப்பு உலக கோப்பையில் இந்த அரிய நிகழ்வை இந்தியா மட்டுமே நிகழ்த்தியுள்ளது.
இதன் மூலம் உலக கோப்பை தொடரில் 6 போட்டிகளில் 60 விக்கெட்டுகள் கைப்பற்றிய தென் ஆப்ரிக்காவின் சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் தென் ஆப்ப்ரிக்க அணி இந்த சாதனையை படைத்தது.
இதற்கு அடுத்த படியாக நியூசிலாந்து அணி 5 போட்டிகளில் எதிரணியின் விக்கெட்டுகளை முழுமையாக வீழ்த்தியுள்ளது. தனது கடைசி லீக்கில் விளையாடிய நியூசிலாந்து அணி வங்களதேச அணியின் 7 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது