இந்திய அளவில் பத்திரப்பதிவு நடைமுறைகளில் தமிழ்நாடு இரண்டாவது இடம் வகிக்கிறது. முதலிடத்தில் ஆந்திராவும், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா மூன்று, நான்காம் இடத்திலும் உள்ளன.
தமிழகத்தில் பத்திரப்பதிவில் இன்னும் என்னென்ன மாற்றங்களை மேற்கொண்டால் முதன்மை மாநிலமாக முன்னேற்ற முடியும்? குறிப்பாக, மோசடிகளைத் தவிர்க்க எந்த மாதிரியான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்? இந்த விஷயங்களில் மற்ற மாநில நடைமுறைகளில் உள்ள சிறந்த விஷயங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
கிரயப் பத்திரத்தில் சொத்தின் புகைப்படம்!
கிரயப் பத்திரத்தில் சொத்தின் புகைப்படம் இடம் பெறும்போது, மோசடிகளை பெருமளவு குறைக்க முடியும். இதற்கான நடவடிக்கை, இந்தியாவில் முதல்முறையாக மத்தியப்பிரதேசத்தில் 2005-ல் கொண்டுவரப்பட்டது. அதாவது, கிரயப் பத்திரத்தில் குறிப்பிடும் சொத்தின் புகைப்படத்தைக் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்கிற நடவடிக்கையை அமல்படுத் தினார்கள்.
இதனைத் தொடர்ந்து குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களிலும் அமல்படுத்தப் பட்டது. காலி நிலங்களுக்கு ஒரு புகைப்படமும், வீடு அல்லது அடுக்குமாடி கட்டடங்களுக்கு இரண்டு புகைப்படங்கள் (முன்பக்கம் மற்றும் பக்கவாட்டுப் படம்) இணைக்கப்பட்டன. இந்த நடைமுறையைத் தமிழகத்திலும் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பத்திரப்பதிவின்போது விற்பவரின் பெயரில் உள்ள பட்டா சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவில் பல மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களில் சமீபத்தில் வழங்கப்பட்ட நில உரிமைச் சான்றை (பட்டா) கிரயப் பத்திரம் பதியும்போது விற்பவர்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் தற்போது சொத்தை விற்பனை செய்ய பத்திரம் பதியும்போது, விற்பவர் பெயரில் உள்ள பட்டாவைக் கொண்டுவருவது கட்டாயம் என கோவை உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் நடைமுறையாக உள்ளது. இதைத் தமிழகம் முழுக்க கொண்டுவர வேண்டும்.
ஆன்லைன் வில்லங்கச் சான்றிதழ்!
ஆந்திராவில் வில்லங்கச் சான்றிதழ்களை 1998-ம் ஆண்டு முதல் பதிவுத் துறையின் வெப்சைட் மூலம் பார்க்கும் வசதி (e-encumbrance) ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது கடந்த 30 ஆண்டு காலத்துக்கான வில்லங்கத்தை தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதி கடந்த 2000ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இந்த வசதி 2002-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. வீட்டில் இருந்தே எப்போது வேண்டுமானாலும் சொத்து விவரங்களைப் பார்த்துக்கொள்ள முடியும். இதனால் ஏதாவது மோசடி நடந்திருந்தாலும் தெரிந்துகொள்ள முடியும். தமிழ்நாட்டிலும் இந்த நடைமுறையைக் கொண்டுவர நடவடிக்கை
எடுக்கலாம்.

பவர் ஆஃப் அட்டர்னி!
தமிழகத்தில் கடந்த 2010 முதல் பவர் ஆஃப் அட்டர்னி தொடர்பாக பல நல்ல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பத்திரப்பதிவு மோசடி பெருமளவு குறைந்துள்ளது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பவர் ஆஃப் அட்டர்னி தரப்பட்டிருக்கும் விஷயத்தை வில்லங்கச் சான்றிதழில் குறிப்பிடும் வசதி தமிழகத்தில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் எலெக்ட்ரானிக் பவர் ஆஃப் அட்டர்னி (e-General Power of Attorney) நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வசதி, ஆந்திராவில் பத்திரப்பதிவு வெப்சைட்டில் உள்ளது.
பவர் ஆஃப் அட்டர்னி பத்திரம் யார் எழுதினார்கள், யார் ஏஜென்ட், அந்த பவர் பத்திரம் தற்போதும் அமலில் உள்ளதா மற்றும் அந்த பவர் பத்திரம் மூலம் எழுதப்பட்ட பிற பத்திரங்கள் எவை என்பதை ஒருசில விநாடிகளிலே தெரிந்துகொள்ளும் வசதியும் உள்ளது. இந்த வசதி தமிழகத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பவர் ஆஃப் அட்டர்னி, ஒரு வருடத்துக்குதான் செல்லுபடியாகும். இதைத் தமிழகத்திலும் அமல்படுத்தலாம்.
பத்திரப்பதிவு: தொடர் விவரங்கள்..!
நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் அமலில் உள்ள ஒரு சிறப்பான நடைமுறையைத் தமிழகத்திலும் அமல்படுத்தலாம். புதுச்சேரியில் ஒரு பத்திரம் பதிவு செய்யும்போது, அந்தப் பத்திரத்தின் தாய்ப்பத்திரம் மற்றும் மூலப்பத்திரத்திலும் இந்தப் பத்திரப்பதிவு விவரம் குறிப்பிடப்படுகிறது.
உதாரணத்துக்கு, 2013-ல் பதிவு செய்யப்பட்ட கிரயப் பத்திரத்துக்கு 2002-ம் ஆண்டு தாய்ப்பத்திரம் மற்றும் 1987-ம் ஆண்டு மூலப்பத்திரம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். சொத்து பதிவு செய்யும்போது அசல் தாய்ப்பத்திரம் மற்றும் அசல் மூலப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த மூலப்பத்திரத்தில் 2002-ம் ஆண்டு மற்றும் 2013-ம் ஆண்டு பத்திரப்பதிவு எண் குறிப்பிடப்படும்.
எந்த பத்திரம் பதிவு செய்யப்பட்டாலும் குறிப்பிட்ட மூலப்பத்திரம் மற்றும் தாய்ப்பத்திர விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதன்மூலம் போலிப் பத்திரங்கள் தவிர்க்கப்படுகின்றன. இந்த நல்ல நடைமுறையைத் தமிழகத்திலும் அமல்படுத்தலாம்.

கட்டணத்தில் பெண்களுக்கு சலுகை..!
இந்தியாவில் சில மாநிலங்களில் பெண்கள் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டால், முத்திரைத்தாள் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. (பார்க்க அட்டவணை) தமிழகத்திலும் இதுபோன்ற கட்டணச் சலுகைளை அமல்படுத்தலாம். இதன்மூலம் பெண்களுக்கு கூடுதல் சமூக அஸ்தஸ்து கிடைக்கும். மேலும், குடும்பச் சொத்துகள் எளிதில் விற்கப்படுவது குறையும்.
கட்டணத்தைக் குறைக்க வேண்டும்!தமிழகத்தில் பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் குறைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தற்போது முத்திரைக் கட்டணம், சொத்தின் அரசு வழிகாட்டி மதிப்பில் 7% மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் 1 சதவிகிதமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் பல மாநிலங்களில் இதைவிட மிகக் குறைவான கட்டணம் உள்ளது.
முத்திரைத்தாள் பதிவுக்கான கட்டணம் மிக அதிகமாக இருப்பதால் பலரும் பத்திரம் பதிவு செய்யாமல், பவர் ஆஃப் அட்டர்னி நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். இதனால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பத்திரப்பதிவு கட்டணத்தைக் குறைக்கலாம்.
குறைவான முத்திரைத்தாள் கட்டணம் உள்ள மாநிலங்கள் என்று பார்த்தால், குஜராத்தில் 4.9 சதவிகிதமாகவும், மஹாராஷ்ட்ரா, ஒடிஷா மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் 5 சத விகிதமாகவும், ஆந்திரப்பிரதேசத்தில் 4 சத விகிதமாகவும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 சத விகிதமாகவும் உள்ளன.
குறைவான பத்திரப்பதிவு கட்டணம் உள்ள மாநிலங்கள் எவை என்று பார்த்தால், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 10,000 (அதிகபட்சம்) ரூபாயும், ஹரியானாவில் 15,000 (அதிகபட்சம்) ரூபாயும், இமாச்சலப்பிரதேசத்தில் 25,000 (அதிகபட்சம்) ரூபாயும் மஹாராஷ்ட்ராவில் 30,000 (அதிகபட்சம்) ரூபாயும் உள்ளன.
மேலே குறிப்பிட்டுள்ள சில மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்தில் உச்சவரம்பு தொகையை நிர்ணயிக்க வேண்டும்.
இதர மாநிலங்களில் உள்ள சிறப்பான பத்திரப்பதிவு நடைமுறைகளைத் தமிழகத்தில் கொண்டுவருவதன்மூலம், தமிழகத்தில் பத்திரப்பதிவில் ஏற்படும் மோசடிகளை வெகுவாகக் குறைத்துவிடலாமே!